×

ஜூன் மாதத்துக்கான இலவச ரேஷன் பொருள் பெறநாளை முதல் வீடுகள்தோறும் டோக்கன் வழங்கப்படும்

சென்னை: தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூன் மாதத்திற்கான இலவச ரேஷன் பொருட்கள் பெறுவதற்கான டோக்கன் வரும் 29ம் தேதி (நாளை) முதல் வீடுகளிலேயே வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய் தொற்றினை தடுக்க பல்வேறு தீவிர நோய் தடுப்பு பணிகளையும், நிவாரண பணிகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் 24.3.2020 முதல் மாநில பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி, ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

இதனால் தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூன் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும், அதாவது ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதல் அரிசியுடன் எப்பொழுதும் வழங்கப்படும் அரிசி ஆகியவை நியாய விலை கடைகளில், விலையின்றி வழங்கப்படும்.நோய் தொற்று ஏற்படாத வண்ணம் மேற்படி அத்தியாவசிய பொருட்கள் பாதுகாப்பாக அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன், வரும் 29ம் தேதி (நாளை) முதல் 31ம் தேதி வரை, குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும்.

அந்த டோக்கன்களில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள், டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் நியாய விலை கடைகளுக்கு சென்று ஜூன் 1ம் தேதி முதல் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Tags : Free Ration Item, Token, Tamil Nadu, CM Edappadi
× RELATED தொழில் நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ...